உங்கள் Kinder Kit குறித்து
குழந்தைகளுக்கு விளையாட்டும் கல்வியும் கைகோர்த்துச் செல்பவை. விளையாட்டு மூலமே குழந்தைகள் தங்களைப்பற்றியும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் கண்டறியவும் கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். அந்தப் பயணத்தில் பெற்றோருக்கும் குடும்பங்களுக்கும் ஒரு மிகப்பெரிய பங்குண்டு. உங்கள் குழந்தையின் Kinder Kit-ல் உள்ள அனைத்துமே ஒரு குடும்பமாக பகிர்ந்து மகிழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாலர் பள்ளியில், உங்கள் குழந்தை ஐந்து கற்றல் மற்றும் மேம்பாடுகளில் வளரவும் விருத்தியடையவும் துணைபுரியும் கற்றல் அனுபவங்களை உருவாக்குவதற்காக விக்டோரியன் துவக்க ஆண்டுகளுக்கான கற்றல் மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பு (VEYLDF) பயன்படுகிறது. அந்த ஐந்து விளைவுகள்:
- அடையாளம்
- சமூகம்
- நல்வாழ்வு
- கற்றல்
- தொடர்புகொள்ளல்
கதைசொல்லும் சதுரத் துண்டுகள்
குழந்தைகள் தங்கள் அன்றாட அனுபவங்களை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதில் கதை சொல்லுதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது அவர்களது கல்வி வளர்ச்சிக்கும் அவர்களைச் சுற்றியிருப்போருடன் எப்படிப் பழகுவது என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள சதுரத் துண்டுகளுடன் நீங்கள் உதவ முடியும்.
- முறை மாற்றிக்கொண்டு படங்களின் பெயர் சொல்லுங்கள்
- அவர்களுடன் சேர்ந்து உருவாக்குங்கள்
- கதை சொல்லுங்கள்
- கேள்வி கேளுங்கள்
கிரேயான்கள் மற்றும் ஓவியப் பலகை
கிரேயான்களைக் கொண்டு வரைவது கற்றுக்கொள்ள பல வழிகளை வழங்குகிறது:
- பென்சிலைப் பிடிப்பது போன்ற தசை இயக்கத் திறன்களை மேம்படுத்துகிறது
- கண்ணுக்கும் கைக்குமான ஒத்திசைவு
- நிறம் மற்றும் வடிவம் குறித்து கற்றுக்கொள்ளுதல்
- காகிதம் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு படைப்பூக்கத்தை வெளிப்படுத்துதல்.
மிக முக்கியமாக, உங்கள் குழந்தை பத்திரமாகவும் நம்பிக்கையுடனும் தங்களைத் தாங்களே வெளிப்படுத்தக் கற்றுக் கொள்வார்கள். சில குழந்தைகள் உங்களால் அடையாளம் காணமுடியாத சில அடையாளங்களை உருவாக்கலாம். அதனால் பரவாயில்லை. வரையக் கற்றுக் கொள்வதின் இயல்பான நடைமுறை இது தான்.
- எண்ணங்களைத் தூண்டுவதற்கு ஓவியப் பலகையைப் பயன்படுத்துங்கள்
- குடும்பமாக வரையும் அனுபவங்களை ஊக்குவியுங்கள்
- வரையும்போது பேசுங்கள்
- நிறங்கள், வடிவங்களின் பெயரைச் சொல்லுங்கள்
விதைகள்
குழந்தைகளுடன் விதைகளை நடுவது சிறப்பான அறிவியல் அடிப்படையிலான கற்றல் அனுபவம். இது அவர்கள் இயற்கை உலகின் அதிசயத்தைக் காணச் செய்யும். அவர்கள் இயற்கையைப் பற்றி கற்றுக் கொள்ளவும், மொழியை கட்டமைக்கவும் எளிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் தெரிந்துகொள்வார்கள். காலப் போக்கில் விசயங்களை எப்படி அவதானிப்பதென்றும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
- தாவரங்கள் குறித்துப் பேசுங்கள்; அவற்றின் பாகங்களின் பெயர்களைச் சொல்லுங்கள்
- ஒன்றாக அவற்றை நடுங்கள்
- ஒவ்வொருநாள் காலையும் வளர்ச்சியை சோதியுங்கள்
- சந்தையில் பழங்கள் காய்கறிகளின் பெயர் சொல்லுங்கள்
புள்ளிகளைச் சேர்த்து விலங்கு வரைதல்
ஆரம்பகட்ட குழந்தைப் பருவத்தில்தான் குழந்தைகள் கைகள், விரல்கள், மணிக்கட்டு, பாதம் மற்றும் பாத விரல்கள் போன்ற சிறிய தசைகள் மீது மேலும் கட்டுப்பாட்டைப் பெறத் தொடங்குகிறார்கள். கைகள் மற்றும் விரல்களில் சிறந்த தசை இயக்க தசைகளை வளர்ப்பது குழந்தைகளின் சுய பராமரிப்புக்கும் பின்னர் எழுதுவதற்கும் முக்கியமானது. விளையாட்டு களிமண், கிரேயான்கள் அல்லது புள்ளிகளை இணைத்து விலங்குகளை வரைதல் ஆகியவற்றின் மூலம் தசை இயக்கத் திறன்களை உங்கள் குழந்தை வளர்க்க முடியும். சிறந்த தசை இயக்கத் திறன்களைப் பயில்வதற்கான சில வழிகள் இதோ:
- விலங்கின் துளைகள் வழியாக லேசுகளைக் கோர்த்தல்
- Kinder Kit-ஐ திறப்பதும் மூடுவதும்
- ஜிப்புகளை அல்லது பொத்தான்களை மூடப் பழகுதல்
- கைகளாலும் விரல்களாலும் விளையாட்டுக் களிமண்ணை உருட்டுதல்
விளையாட்டுக் களிமண்
ஒன்றை உருவாக்குவதற்காக உங்கள் குழந்தை விளையாட்டுக் களிமண்ணைப் பயன்படுத்தும்போது, அவர்கள் பல மிக முக்கியமானவற்றைச் செய்கிறார்கள்:
- தசை இயக்கத் திறன்கள் மேம்படுகிறது
- தேடியறிய தங்கள் புலன்களைப் பயன்படுத்துகிறார்கள்
- அவர்களது கற்பனையைப் பயன்படுத்துகிறார்கள்.
உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் களிமண் மூலம் உருவாக்குவது கற்றலில் ஒரு முக்கியமான பகுதியாகும்.
- பந்தாகச் சுருட்டு, வெடிக்க வை, இடிக்க வை, நசுக்கி வை
- அதைப் பற்றி பேசுங்கள்
- கம்புகள் அல்லது சிறகுகள் அல்லது ஓடுகள் போன்ற பிற பொருட்களைச் சேருங்கள்
- உங்களால் கண்டறிய முடிவதை வடிவங்களாக ஆக்குங்கள்
குழந்தைகளின் புத்தகங்கள்
ஒன்றாகச் சேர்ந்து புத்தகங்களை வாசிப்பதும் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதும் பிணைப்பை ஏற்படுத்தும் சிறந்தவழி. கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மிக முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்று. உங்கள் குழந்தைக்குக் கதை சொல்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் அவர்கள் கற்பனையும் புதிய சொற்களை அறிந்துகொள்வதும் மேம்படும்.
- ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுங்கள்
- வசதியான இடத்தில் அமர்ந்து வாசியுங்கள்
- பக்கங்களை அவர்கள்திருப்ப விடுங்கள்
- பாத்திரங்களுக்கேற்ப வெவ்வேறு குரல்களைப்பயன்படுத்துங்கள்; படங்களைப் பற்றி பேசுங்கள்
இசை உருவாக்குவோர்
குழந்தைகளின் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு இசை பல பலன்களைத் தருகிறது. இசையை உருவாக்குவது உங்கள் குழந்தை புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு வேடிக்கையான வழி. ஒன்றாகக் குடும்பத்துடன் பாடுவது குழந்தைகள் தங்களைப் பற்றி நன்றாக உணரச் செய்யும். நடனமாடுவது, பாடுவது, அசைவது, குதிப்பது மற்றும் காஸ்டானெட்டுகளைச் சொடுக்குவது என இவை அனைத்துமே வேடிக்கையின் பகுதிகள்.
உங்கள் குழந்தையுடன் இசையை அனுபவிக்க இதோ சில யோசனைகள்:
- உங்களுக்குப் பிடித்த பாடலுக்கு நடனமாடவும் அசையவும் செய்யுங்கள்
- எண்களைக் கற்றுத்தர பீட்டுகளை எண்ணுங்கள்
- சிறிய ரைமிங்கான பாடல்களைப் பயிலுங்கள்
- வார்த்தைகளில் அசைகளை எண்ணுவதற்கு காஸ்டானெட்டுகளைப்பயன்படுத்துங்கள்
Kit செயல்பாட்டுப் பெட்டி
Kit செயல்பாட்டுப் பெட்டி புத்தகங்களையும் விளையாட்டுப்பொருட்களையும் சுமப்பதற்கும் மேலான ஒன்று - கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் துணைபுரிய இதைப் பயன்படுத்தலாம். காந்த விளையாட்டு, விளையாட்டுக் களிமண் மற்றும் வரைவதற்கு வெண்பலகையின் மேற்புறம் சிறந்தது. Kit-ஐ ஒரு நிலைச்சட்டத்தில் மடியுங்கள். ஒரு தட்டையான பசுமை வெளியில் Kit-ஐ வைத்தால் கற்பனையான விளையாட்டுக்குப் பயன்படும். அது ஒரு கடற்புறக் காட்சியாகவோ அல்லது ஒரு நகரத் தெருவாகவோ இருக்கலாம். பாலர்பள்ளிக்கு நீங்கள் வந்த வழியை திரும்ப உருவாக்குங்கள். Kit பெட்டியைப் பயன்படுத்தும் வேறு சில வழிகள் இதோ:
- புதிய உலகங்களை வரைதல்
- விளையாட்டுக் களிமண்விளையாட்டு விரிப்பு
- புத்தகங்கள் அல்லது பொம்மைகளுக்குபெட்டியை வைத்திருங்கள்
- விளையாட்டு ஊன்றுகோலாக பாசாங்கு செய்யலாம்
Kit செயல்பாட்டுப் பெட்டி சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி ஆன பொருட்களில் இருந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தையின் பாலர்பள்ளி நினைவுகளைச் சேர்த்துவைக்கும் விதத்திலும் இது உள்ளது.
சமூகத்தைக் கட்டமைத்தல்
விக்டோரியா ஒரு பன்முகச் சமூகம். வெவ்வேறு மொழிகளைப் பேசும் பல கலாச்சாரங்களின் வீடு. நாம் யாரென்பதை வடிவமைப்பதில் பெரும்பங்கு பன்முகத்தன்மைக்கு உண்டு. வெவ்வேறு சமூகங்கள் குறித்த உரையாடல்களுக்கு இந்த Kit-ல் உள்ள பொருட்கள் துணைபுரியும்.
- குழந்தைகளுக்கு விளையாட்டும் கல்வியும் கைகோர்த்துச் செல்பவை. விளையாட்டு மூலமாகவே குழந்தைகள் தங்களைப் பற்றி கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.
- வேறு கலாச்சாரங்கள் அல்லது உங்களுடையதிலிருந்து உணவு தயாரிப்பது போல பாசாங்கு செய்ய விளையாட்டுக் களிமண் பயன்படுகிறது
- பிற கலாச்சார அல்லது உங்களுடைய பாரம்பரிய இசையைக் கேட்கையில் காஸ்டானெட்டுகளைச் சொடுக்குங்கள்.
- பிற நாடுகளையும் அவற்றின் தேசிய விலங்குகள் குறித்தும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்
ஆஸ்திரேலிய சைகை மொழியில் (Auslan) புத்தகங்கள்
2023 Kinder Kit-ல் உள்ள அனைத்துப் புத்தகங்களும் ஆஸ்திரேலிய சைகை மொழியிலும் கிடைக்கின்றன. காணொளிகளில் ஆஸ்திரேலிய சைகை மொழியும் வசனவுரையும் உண்டு.
Auslan என்பது பெரும்பாலான ஆஸ்திரேலிய காதுகேளாதோர் சமூகத்தால் பயன்படுத்தப்படும் சைகை மொழி. இது விக்டோரியாவின் துவக்ககட்ட குழந்தைப்பருவ மொழித் திட்டங்களில் ஒன்றாகவும், சில நான்கு வயதுக்கான பாலர்பள்ளிகளில் கிடைப்பதாகவும் உள்ளது.
குழந்தைப்பருவத்தில் வேறு மொழியைக் கற்றுக்கொள்வதால் குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல பலன்கள் உள்ளதாக கல்வி வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்:
- வாசிப்புக்கும் எழுதுவதற்கும் முந்தைய திறன்கள் அதிகரிக்கிறது
- அறிதிறனில் நெகிழ்வு
- சுயமரியாதையையும் நல்வாழ்வையும் வலுப்படுத்துகிறது
- கலாச்சார அடையாளத்துக்கு வலுவூட்டுகிறது.
அடையாளத்தை மதித்தல்
நமது பூர்வகுடி மக்களின் கலாச்சாரம் ஆஸ்திரேலிய வரலாற்றின் முக்கிய பாகமாக உள்ளது. அனைத்துக் கலாச்சாரங்களையும் கற்றுக்கொள்ள எல்லாக் குழந்தைகளையும் ஊக்குவிப்பதால், புரிதல், ஏற்கும் தன்மை மற்றும் பெருமிதம் உருவாகிறது. Kits-ல் நமது பூர்வகுடி எழுத்தாளர்கள் மற்றும் உருவாக்குநர்களைக் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறோம். உதாரணமாக, ஸ்டோரிபிளாக்குகள் அபாரிஜின கதைசொல்லும் சிலிர்ப்பூட்டும் பாரம்பரியத்தைச் சித்தரிக்கிறது. பூர்வகுடி மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் குறித்து உங்கள் குழந்தை அறிந்துகொள்ள உதவும் சில செயல்பாடுகள் இதோ:
- விலங்குகள் அல்லது பொருட்களுக்கான அபாரிஜின சின்னங்களைத் தெரிந்துகொள்ளுதல்
- அபாரிஜின தலைவர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் குறித்துப் பேசுதல்
- பூர்வகுடியினரின் கலாச்சாரங்களையும் மக்களையும் குறித்து மேலும் அறிந்துகொள்ளுதல்
நல்வாழ்வும் கூடுதல் ஆதரவும்
அனைத்துக் குழந்தைகளும் வெவ்வேறு வகையில் தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக் கொள்கிறார்கள். Kinder Kit உங்கள் குழந்தையின் அனைத்துத் திறன்களுக்கும் சவால்விடும் பல வெவ்வேறு வழிகளை வழங்கக்கூடிய புத்தகங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் அளிக்கிறது. சிலநேரங்களில் உங்கள் குழந்தையின் கற்றலுக்கு நீங்கள் கூடுதலாக உதவிபுரிய வேண்டியிருக்கும். உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ கூடுதல் உதவி தேவையென நீங்கள் நினைத்தால் நீங்கள் செய்யக்கூடிய பல வழிகள் உள்ளன:
- விக்டோரியாவின் பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் திறமைகளும் அறிவும் உள்ளது. உங்கள் கேள்விகள் குறித்து உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் பேசுங்கள்
- உங்கள் மருத்துவரை அல்லது தாய்சேய் நலச் செவிலியரைக் காண நேர ஒதுக்கீடு ஏற்படுத்திக்கொண்டு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்
- Parentline-ஐ 13 2289 என்ற எண்ணில் இலவசமாக அழைத்து இரகசிய ஆலோசனையும் உதவியும் பெறலாம்
'கிண்டர் கிட்ஸ்' (Kinder Kits) பாதுகாப்பானவை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியவை
கிண்டர் கிட்ஸில் உள்ள அனைத்துப் பொருட்களும் அதற்கான பாதுகாப்புத் தரநிலைகளைப் பூர்த்திசெய்கின்றன. இவை பாலர்பள்ளி செல்லும் மூன்றுவயதுக் குழந்தைகளுக்கு ஏற்றது.
சிறிதளவுப் பொருட்கள் சிறிய பாகங்களைக் கொண்டிருக்கும். இவை மூன்றுவயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள் பயன்படுத்த ஏற்றதல்ல.
இவை வெண்பலகை குறிப்பான்கள் (whiteboard markers) மற்றும் காந்த வெண்பலகை அழிப்பான். அழிப்பானின் மையத்தில் சிறிய காந்தம் பதிக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பொருட்கள் பேக்கேஜ் வெளிப்புறத்தில் பொருத்தமான எச்சரிக்கைகளுடன் தெளிவாக அடையாளமிடப்பட்டுள்ளன. இவை எதற்காக உள்ளதோ அந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உங்களிடம் மூன்றுவயதுக்குக் கீழேயுள்ள குழந்தை இருந்தால், அவர்கள் அணுகமுடியாத இடத்தில் இவற்றை வைக்கவும்.
அனைத்து வயதுக் குழந்தைகளுக்குமான அனைத்து விளையாட்டுப் பொருட்களையும்போல, பெற்றோரும் பராமரிப்பாளர்களும் பயன்படுத்தும் முன் எப்போதும் இவற்றை சோதிக்க வேண்டும். பயன்படுத்தியதில் தேய்மானம் அடைந்திருந்தால் அவற்றை அகற்ற வேண்டும்.
Reviewed 22 September 2023